பல்கலைக்கழக வாழ்க்கை

 

 

பூக்களின் தலைகளில் புழுதி பறக்கும் பரபரப்பு பூமியில் இருந்துவிட்டு.. ஒரு புல்வெளி தேசத்திற்குள் புகுந்திருக்கிறேன். புழுதி நிலத்து புன்னகை நினைவுகளோடும் புதிய தேசத்தில் கனிய வேண்டிய கனவுகளோடும் ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் அடியெடுத்து வைக்கிறேன்.

 

இது கல்வியாளர்களை உருவாக்க அமைக்கப்பட்ட இடமா.. அல்லது கவிஞர்களை உருவாக்குவதற்காகவா எனத் தோன்றிற்று. பரந்துகிடந்த இயற்கை அழகின் திரட்சி, யாரையும் ஆட்கொள்ளும். பாரதியார் உயிரோடிருந்திருந்தால்.. அவரை இந்தப் பல்கலைக்கழகத்தின் க்ராம்வெல் விடுதியில் தங்கச்செய்து, Great Court என்ற திறந்த வெளியிலும், இடையே ஒடும் நதிகளிலும், வகுப்புக்கு போகாத பறவைகளுக்கு மத்தியிலும் நடமாடவிட்டு, குளோரியா ஜீன்ஸிலிருந்து அடிக்கடி காபியோ தேனீரோ வரவழைத்து குடிக்கச் செய்து இன்னும் பல காவியங்களை எழுதச் செய்திருந்தால் கண்டிப்பாக அவரது சுதந்திர தாகம் தணிந்திருக்கும் என்று ஒரு தமிழன் என்ற முறையில் நினைத்துக் கொண்டேன்.

 

பல்கலைக்கழகத்து பெருமைகளையும், மாணவர்களிடமிருந்து நிர்வாகம் எதிர்பார்ப்பதையும் வேந்தரும், பேராசிரியர்களும் விளக்கிய நிகழ்ச்சி யூனியன் அரங்கில் நடைபெற்றது. சிலரது ஆங்கிலம், ஆம்லெட் போட்டது போல் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் புரிந்தது. சிலரது ஆங்கிலம் கொத்து பரோட்டாவை போல் குழப்பமாகவே இருந்தது. ஒலிபெருக்கி தகராறா அல்லது என் செவிபழக்கம் தகராறா எனத் தெரியவில்லை. அன்று மாணவர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது- எந்த நாட்டிலிருந்து எத்தனை மாணவர்கள் இந்தக் கல்வியாண்டில் சேர வந்திருக்கிறார்கள் என்ற கணக்கை அரங்குத்திரையில் அரங்கேற்றிய நிகழ்வுதான். அந்தந்த நாட்டின் பெயர் குறிப்பிடும்போது அந்தந்த நாட்டின் மாணாக்கர் எழுந்து நிற்பது வழக்கம். இந்தியக் கொடியை திரையில் பார்த்தபோது எழுந்து நின்றேன். அதுவரை எனக்கு அறிமுகமாகாத என் பக்கத்து இருக்கை மாணவரும் நின்றார். ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துகொண்டோம். எங்களையும் சேர்த்து 167 பேர் எழுந்து நின்றனர். மகிழ்ச்சியாகத்தானிருந்தது.

 

கல்லுரி உணவகங்களில் அதிகப்படியாக காணப்பட்டது  Sausage Roll  எனப்படும் நீளமான சமோசாவை போன்ற உணவு வகை. அதில் ஒன்றை மட்டுமே மதிய உணவிற்கு பெரும்பாலான மாணவர்கள் உட்கொள்கிறார்கள். நம் ஊரில் கிரிக்கெட் ஆடிவிட்டு வரும் சிறுபசியை போக்க சாலையோர கடைகளில் வாங்கி தின்னும் தின்பண்டங்கள் இங்கே கொஞ்சம் பெரிய அளவில் முழு உணவாக மேற்கொள்ளப்படுகிறது என ஒப்பிட்டுக்கொண்டேன். ஆனால், இப்படி ரூபாய் கலாசாரத்தையும், டாலர் கலாசாரத்தையும் அடிக்கடி ஒப்பிடுவது அவசியமற்ற செயலென்றே தோன்றியது. நன்றாகத்தான் இருந்தது அன்று நான் உண்ட முதல் Sausage Roll.

 

நூலகம் போவோமென புறப்பட்டேன். சமூகவியல் நூலகமே என் பாடங்களுக்கான ஒன்று. மிகப்பெரிது. இது நூலகமா அல்லது கணிப்பொறி மையமா என்று வியக்கச்செய்தது அங்கிருந்த கணிப்பொறிகளின் எண்ணிக்கை. அறிவின் தேடலுக்கு அழகான சூழல். ஓர் இலையை எடுத்து நடுவில் போட்டாலும் குலை விழுந்தது போல் கேட்கும் அமைதி. மாணவர்கள் கல்வி வளர்ப்பதற்கும், காதல் கடிதம் எழுதுவதற்கும் சிறந்த இடம். நூலகம்தான் ஒரு பல்கலைக்கழகத்தின் இதயம் என்ற அடிப்படை இதன் அறைகளின் சுவர்களில் அடிநாதமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது,

 

அடுத்த வாரம் நான் செல்ல வேண்டிய வகுப்புகளை இப்பொழுதே பார்த்துவிட வேண்டுமென விரைந்தேன். நாளின் தொடக்கத்திலேயே கையில் பல்கலைக்கழக வரைப்படத்தை கொடுத்துவிட்டார்கள். வரைப்படம் பார்க்கும் கொடுமை இன்றோடு தொலைந்ததென்று பத்தாம் வகுப்பின் பூகோள தேர்வு முடித்து வெளிவந்தபோது நானும் நண்பர்களும் பெருமூச்சு விட்டது நினைவுக்கு வந்தது. எனக்கு நானே சிரித்து கொண்டதை பார்த்துச் சிரித்து விட்டு போனாள் ஒரு சீனத்து மாணவி. வரைபடம் வழி நடந்தேன். வகுப்பறை. வகுப்புக்கழைத்தால் மாணவர்கள் திரையரங்கிற்கு ஒடி விடுகிறார்கள் என நினைத்தோ என்னவோ இங்கே வகுப்பறைகளையே திரையரங்கு போல் அமைத்திருக்கிறார்கள். நமக்கு இவ்வளவு மரியாதை கொடுக்கிறார்களே, என்னவெல்லாம் எதிர்பார்ப்பார்களோ என்று ஒரமாய் ஒர் அச்சம் பிறந்தது.

 

பெரும்பாலான மாணவர்கள் ஒரே நாளில் கூட்டம் சேர்த்துவிட்டார்கள். எனக்கோ கண்கள் மட்டுமே செயல்பட்டுகொண்டிருந்தன. நாளை பார்த்துகொள்வோமென பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிட்டேன். சரியான சில்லறை கொடுக்கவில்லையென்றாலும் சிரித்துக்கொண்டுதான் சீட்டு தருகிறார்கள். இந்த மக்கள் மிருதுவானவர்கள். தாங்கள் மகிழ்ச்சியாக இருத்தல், யாருக்கும் தங்களால் துன்பம் நேராதிருத்தல்- இவ்விரண்டும் இவர்கட்கு இரு கண்கள்.

 

 

 உலகத்தைக் கல்வியோடு சேர்ந்து காதலிக்கச் சொல்கிறது இந்த வளாகம். வணிகமயமாகிவிட்ட பூமியை நீ உலகமயமானால்தான் வெல்ல முடியுமென விளம்பர பலகைகள் பயமுறுத்துகின்றன. புதிய எல்லைகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். புதிய முகங்களையும், புதிய புத்தகங்களையும் வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். அறிவும், இதயத்தின் மிகச்சில துடிப்புகளும் இன்று என்னோடு இருந்தாலும்.. ஆன்மா மட்டும் தாய் மண்ணோடுதான் இருக்கிறது. மீண்டும் அங்கே திரும்புகின்ற காலம் வரையேனும் "யாதுமூரே  யாவருங்கேளிர்" என்ற தமிழ்ஞானம் எனக்குள் ஊறி வர வேண்டுகிறேன்.